அமெரிக்காவில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய நபர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுத்ததால், கடந்த 25 ஆண்டுகளாகத் தான் பல இன்னல்களையும் விசாரணைகளையும் சந்தித்து வருவதாகக் குடியிருப்பு வளாக மேலாளர் ஹோலி ராட்ச்ஃபோர்ட் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரில் உள்ள 'பார்க்வூட்' குடியிருப்பு வளாகத்தின் மேலாளரான ஹோலி ராட்ச்ஃபோர்ட், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

நட்பும் துரோகமும்: கடந்த 1999-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒமர் அல்-பயூமி என்பவர் தனது குடும்பத்துடன் இந்த குடியிருப்பில் குடியேறினார். எப்போதும் சிரித்த முகத்துடன் பழகிய பயூமி, ஹோலியுடன் நல்ல நட்புறவில் இருந்துள்ளார்.

தொடர்ந்து, 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நவாஸ் மற்றும் காலித் ஆகிய இருவரை அழைத்து வந்த பயூமி, அவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்துள்ளார். அவர்களிடம் போதிய பணமில்லாத போது, அவர்களுக்காகக் பிணைப் படிவத்தில் கையெழுத்திட்டு, வங்கிக் கணக்கு தொடங்கவும் உதவி செய்துள்ளார்.

அமைதியான பின்னணியில் மறைந்திருந்த கொடூரம்: இது குறித்துப் பேசிய மேலாளர் ஹோலி, "அந்த இரு நபர்களும் குடியிருப்பில் இருந்தபோது சந்தேகப்படும்படியாக எதுவுமே செய்யவில்லை. மிகவும் அமைதியாகவும் வழக்கம்போலவுமே காணப்பட்டார்கள். ஆனால், செப்டம்பர் 11 தாக்குதலில் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய 19 அல்-கய்தா பயங்கரவாதிகளில் இவர்களும் அடங்குவர் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தேன்," எனக் கூறியுள்ளார்.

25 ஆண்டுக் கால துயரம்: பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஒமர் அல்-பயூமி பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் ஹோலி தனது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ததுடன், பல கட்ட விசாரணைகளுக்கும் ஆளானார்.

"எனக்கு மிகவும் அறிமுகமான, நல்ல நண்பராக இருந்த பயூமி மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை இன்னமும் என்னால் நம்ப முடிவில்லை. அவர் காட்டிய முகத்திற்கும், அவரது உண்மை முகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை என்னால் யோசிக்கவே முடியவில்லை. இவர்கள் மூவருடனான அந்தச் சந்திப்பும் நட்பும், கடந்த 25 ஆண்டுகளாக என் வாழ்க்கையைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது," என ஹோலி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.