1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் நாயகனும், ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை வீரருமான ஆல்ஃபிரட் டைரோன் குக் (A.T. Cooke) தில்லியில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.

விமானப் படை நிகழ்ச்சிக்காக இந்தியா வருகை:

விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.டி. குக், இந்திய விமானப் படையின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்தார்.

இந்நிலையில், அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 19-ஆம் தேதி தில்லியில் அவர் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 போரின் வரலாற்று நாயகன்:

1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, மேற்கு வங்கத்தின் கலைகுண்டா (Kalaikunda) வான் பகுதியில் எதிரி நாட்டின் போர் விமானங்களுக்கு எதிராக ஏ.டி. குக் நடத்திய வான்வழிச் சண்டை, இந்தியப் படை வரலாற்றில் இன்றளவும் புகழ்பெற்ற வீரம் செறிந்த சம்பவமாகப் போற்றப்படுகிறது.

ஆங்கிலோ-இந்தியரான ஏ.டி. குக், தனது வீர தீரச் செயல்களுக்காகப் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

கடைசி ஆசை:

முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மனிஷ் பட்நகர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்:

"ஆங்கிலோ இந்தியரான ஏ.டி. குக், தன் மறைவுக்குப் பிறகு தனது உடலைத் தகனம் செய்து, அதன் அஸ்தியை இந்தியாவின் புனித நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார்."

எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.டி. குக்கின் மறைவுக்கு இந்திய விமானப் படை (IAF), மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.