தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஜன. 1 முதல் அமல்: அரசாணை வெளியீடு!
N.F.Rifka
admin

இந்த அரசாணையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், ஜன. 1, 2026 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1.4.2004-க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) இணையான பலன்களை அளிக்கும் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (TAPS) தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அரசாணையை (G.O.Ms.No.07) நிதித் துறை செயலாளர் டி. உதயச்சந்திரன் (ஜனவரி 9, 2026) வெளியிட்டார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) , மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்வதற்காக, கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அரசு கவனமாக ஆராய்ந்தது.
அரசு ஊழியர்களின் நலனையும் , மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, உறுதி அளிக்கப்பட்ட மற்றும் நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்குடன் இந்த புதிய 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு முடிவெடுத்தது.
புதிய ஓய்வுதிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (1.4.2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு):
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்:
'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் (அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படி) ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த 50% ஓய்வூதியம் வழங்குவதற்கு, ஊழியர்கள் 10% பங்களிக்க வேண்டும். ஓய்வூதிய நிதிக்குத் தேவைப்படும் முழு கூடுதல் நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வுகளுக்கு உரிமை உண்டு.
குடும்ப ஓய்வூதியம்:
ஓய்வூதியதாரர் இறந்தால், அவர் கடைசியாகப் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக, தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
பணிக்கொடை:
பணி ஓய்வின்போது அல்லது பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் பட்சத்தில், பணிக்காலத்திற்கு ஏற்ப ₹25 லட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்:
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் (பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து –புதிய ஓய்வுதிய திட்டத்தை (TAPS) தேர்ந்தெடுப்பவர்களுக்கும் சேர்த்து), குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
சிறப்பு கருணை ஓய்வூதியம்:
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் ஓய்வூதியம் இல்லாமல் ஓய்வு பெற்றவர்களுக்கு, பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்புக் கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
யாரெல்லாம் பயனடைவார்கள்?
01.01.2026 முதல் பணியில் சேரும் அனைத்துத் தகுதியான அரசு ஊழியர்களுக்கும் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஊழியர்கள் (பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள்- CPS): 01.01.2026 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் தகுதியுள்ள (CPS) ஊழியர்கள் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், 01.01.2026-க்கு முன்னர் பணியில் இருந்த (CPS) ஊழியர்கள், ஓய்வு பெறும் நேரத்தில் 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அல்லது பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) பலன்களுக்கு இணையானவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும் விருப்பம் வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களையும், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, கடுமையான நிதிச் சூழலிலும் இந்தத் திட்டத்தை அரசு முழுமையாகச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள் மற்றும் செயல்முறை வழிகாட்டுதல்கள் ஆகியவை தனியாக அறிவிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
